நமக்கு நாமே மொட்டையடித்துக் கொண்டால், அது நேர்த்திக்கடன்; அடுத்தவர்
அடித்தால் ஏமாற்று வேலை; அரசாங்கமே செய்தால், அதன் பெயர் பட்ஜெட். இதில்,
கிண்டலுடன் நிஜமும் இருக்கிறது. கிண்டல், நிஜத்தின் குரூரத்தைக்
குறைக்கிறது. பொருளாதார விவாதங்கள் தடம் மாறும் போது, அரசியல்
சடங்குகளாகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் மற்றும்
விவாதிக்கப்படும் போது, முந்தைய ஆண்டு பட்ஜெட்டின் நிறைகுறைகள் கண்டு
கொள்ளப்படுவதில்லை. எல்லாமே சடங்கு என்பதில், எள்ளளவும் சந்தேகமில்லை.
லைசன்ஸ், கோட்டா முறையிலிருந்து மாறி, புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்து, 20 ஆண்டுகளாகின்றன. இருந்தாலும், முக்கால்வாசி மக்கள் வசதியாக வாழவில்லை. அடித்தட்டு மக்களின் சராசரி தினசரி வருமானம் எவ்வளவு என்பதை, ஏர்கண்டிஷன் காரில் வந்து, ஏர்கண்டிஷன் அறைகளில் இருந்து விவாதிக்கும் பணக்கார அதிகாரிகள், நிபுணர்கள் யதார்த்தத்திற்கு புறம்பான தகவல்களைத் தருகின்றனர். இருந்தாலும், இந்தத் தவறான தகவல்களின் அடிப்படையிலேயே, பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில், வருடா வருடம் குறிப்பிடப்பட்ட வரவுகள் முழுமையாக வந்தனவா, வரவில்லை என்றால் ஏன் வரவில்லை, செலவுகள் வரம்புகளைத் தாண்டின என்றால், ஏன் எதற்காக, உபரித் தொகை எப்படி சமாளிக்கப்பட்டது என்பது பற்றி பொதுமக்கள் தகவலுக்காக, எந்த ஆவணமும் வெளியிடப்படவில்லை. வெறும் சடங்குகளாக வெளிவந்த அறிக்கைகளில், முழு உண்மைகளும் சொல்லப்பட்டனவா என்பது சந்தேகமே. சில தவறுகளுக்கு, யார் காரணம் என்பது சொல்லப்படவில்லை; அப்படிக் காரணமானவர்கள் மீது, எந்த தண்டனையும் இல்லை. இந்நிலையில், பட்ஜெட் என்பது வெறும் சடங்கு தானே.
பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏதோ சொல்வார். ஆளும் கட்சியினர்
மேஜையை தட்டுவர்; எதிர்க்கட்சியினர் மைக்கை தட்டுவர். பட்ஜெட் வெளியான
தினத்தில் பத்திரிகைகள், சில தொழிலதிபர்களையும், வியாபாரிகளையும் பேட்டி
காணும். தொலைக்காட்சிகள் அறிவுஜீவிகளையும், அரசியல்வாதிகளையும் அருகருகே
வைத்து, விவாதம் நடத்தும். மாநிலத் தலைநகரங்களில் ஏதாவது ஒரு அமைப்பு,
பொருளியல் நிபுணர்களை அழைத்து, பட்ஜெட் பற்றிப் பேசச் சொல்லும். அவரும்
எத்தனையோ விஷயங்கள் பற்றிப் பேசி, இடைஇடையே நடப்பு பட்ஜெட் பற்றி, சில
வார்த்தைகள் சொல்வார். சில திருத்தங்களுடன் சட்டசபைகளிலும்,
பார்லிமென்டிலும் பட்ஜெட் நிறைவேறும். அப்புறம் அதற்குப் புறம்பாக எது
நடந்தாலும், யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அப்படியானால், பட்ஜெட் எதற்கு?
நல்ல கேள்வி.லைசன்ஸ், கோட்டா முறையிலிருந்து மாறி, புதிய பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்து, 20 ஆண்டுகளாகின்றன. இருந்தாலும், முக்கால்வாசி மக்கள் வசதியாக வாழவில்லை. அடித்தட்டு மக்களின் சராசரி தினசரி வருமானம் எவ்வளவு என்பதை, ஏர்கண்டிஷன் காரில் வந்து, ஏர்கண்டிஷன் அறைகளில் இருந்து விவாதிக்கும் பணக்கார அதிகாரிகள், நிபுணர்கள் யதார்த்தத்திற்கு புறம்பான தகவல்களைத் தருகின்றனர். இருந்தாலும், இந்தத் தவறான தகவல்களின் அடிப்படையிலேயே, பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களில், வருடா வருடம் குறிப்பிடப்பட்ட வரவுகள் முழுமையாக வந்தனவா, வரவில்லை என்றால் ஏன் வரவில்லை, செலவுகள் வரம்புகளைத் தாண்டின என்றால், ஏன் எதற்காக, உபரித் தொகை எப்படி சமாளிக்கப்பட்டது என்பது பற்றி பொதுமக்கள் தகவலுக்காக, எந்த ஆவணமும் வெளியிடப்படவில்லை. வெறும் சடங்குகளாக வெளிவந்த அறிக்கைகளில், முழு உண்மைகளும் சொல்லப்பட்டனவா என்பது சந்தேகமே. சில தவறுகளுக்கு, யார் காரணம் என்பது சொல்லப்படவில்லை; அப்படிக் காரணமானவர்கள் மீது, எந்த தண்டனையும் இல்லை. இந்நிலையில், பட்ஜெட் என்பது வெறும் சடங்கு தானே.
ஒரு சம்பவம், இதை நியாயப்படுத்தும். தினமும் ரயில் தாமதமாக வந்ததால் நொந்து போன ஒரு பயணி, நேராக ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குப் போய், "ஏனய்யா... எல்லா ரயில்களும் தாமதமாக வருகின்றன. எதற்கய்யா இந்த அட்டவணை?' எனக் கேட்டு, தான் வாங்கியிருந்த ரயில்வே கால அட்டவணையை மேஜையில் தூக்கிப் போட்டார். கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் ஸ்டேஷன் மாஸ்டர், "மிஸ்டர் பாசஞ்சர்... டைம்டேபிள் என்ற ஒன்று இல்லாமல், ரயில்கள் தாமதமாக வருவதை எப்படிக் கண்டுபிடிப்பது?' தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இப்படித் தான். துண்டு விழுவதைத் தெரிந்து கொள்வதற்காக வெளியிடப்படும் கணக்கு. இது வெறும் நிதிநிலை அறிக்கை, நிதி நிலைக் கட்டுப்பாட்டு ஆவணம் அல்ல. எப்படியிருந்தாலும், பட்ஜெட் தயாரிப்பில் பொருளாதார நிபுணர்கள் ஈடுபடுவது உண்டு. தகவல்கள், புள்ளி விவரங்கள் தருவதே அவர்களது வேலை. தொகையை அரசியல் தலைமை தான் முடிவு செய்யும். ஆக, பட்ஜெட் என்பது, பொருளாதாரப் போர்வையில் வெளிவரும் அரசியல் அறிக்கை. அரசாங்கம் எதையும் கேட்டுக் கொள்ளாது என்ற போதிலும், அரசியலுக்கும், அரசாங்கப் பொருளியல் துறைக்கும் அப்பாற்பட்ட அமைப்புகளும், அறிவுஜீவிகளும் அவ்வப்போது ஏதாவது சொல்லாமல் இருப்பதில்லை.
பூகோளம் சொல்லும் அட்சரேகை, தீர்க்க ரேகை, பூமத்திய ரேகை போல், "கரீபீ ரேகா' எனப்படும் வறுமைக்கோடும், கற்பனைக் கோடே. பூகோள ரேகைகள் எங்கே இருக்கும் என்பதில், மேப் வரைபவர்களிடையே முரண்பாடுகள் இல்லை. ஆனால், வறுமைக்கோடு சரியாக நிர்ணயிக்கப் படுவதில்லை. அது கஷ்டம் என்பதே காரணம். வறுமைக் கோட்டுக்கு பதிலாக, வளமைக்கோட்டை அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம். பெருநகரங்களில் அதி உயர்மட்ட பணக்கார வர்க்கம், 5 சதவீதம், கிராமப்புறங்களில் 1 சதவீதம். யார், யார் ஏழைகள் என்று நிர்ணயிப்பதில் உள்ள கஷ்டங்கள், யார், யார் பணக்காரர் என்பதில் இல்லை. எனவே, வளமைக்கோட்டின் வழியே சென்று, பட்ஜெட் போடலாம். அது மறைமுக வரியின் அளவைக் குறைத்து, நேரடி வரிவிகிதத்தை அதிகமாக்கும். அதுவே நல்லது என்பது, மக்கள் இயக்கங்களின் தேசியப் பேரவையின் கருத்து. சுதந்திரம் பெற்ற புதிதில் பணக்காரர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருந்தனர். அடுத்த தலைமுறை மக்கள் பிரதிநிதிகள், பணக்காரர்கள் ஆயினர். எனவே, இவர்களுக்கு வறுமைக்கோட்டை விட அதிகமாகவே, வளமைக்கோடு பற்றி தெரியும். தாம் தாண்டி வந்துள்ள கோட்டைப் பற்றி, இவர்களுக்கு கவலை இல்லை. பார்லிமென்டும், தேர்தல் கமிஷனும் பெற்ற தகவல்படி, ஒரு மக்கள் பிரதிநிதியின் சராசரி சொத்து மதிப்பு, 10 கோடி ரூபாய்க்கும் மேல். அதாவது, இது தரப்பட்ட கணக்கு. மறைத்த தொகைகளையும் சேர்த்தால், அது, 100 கோடியையும் தாண்டலாம். இது, ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என்றாலும், ஒரு விபரீத உண்மையாகி விட்டது.
மக்களும் சுமாராக வாழ வேண்டுமென்றால், எல்லாருக்கும் வேலைவாய்ப்பு தேவை. அதற்கான திட்டங்கள், ஏட்டளவில் தான் உள்ளன. "யானை சிந்தும் சோற்றுக் கவளத்தின் சிறு பகுதி, பல எறும்புகளுக்கு உணவாகும்...' என்று, ஒரு தமிழ்ப் பாடல் உண்டு. அதன்படி நாட்டின், 3 சதவீத அதிகோடீஸ்வரர்கள், செலவுகளைக் குறைத்துக் கொள்ளாத பட்சத்தில், அவர்கள் மீது அதிக அளவு வரி விதிக்கலாம். ஆனால், "இன்றைய நடப்பின் படி, நடுத்தர வர்க்கத்திற்கு தரப்படுவதை விட, அதிக அளவு வரிச் சலுகைகள், தனியார் நிறுவன உயர்நிலை நிர்வாகிகளுக்கு தரப்பட்டு இருக்கிறது. அந்த உயர்நிலைச் சங்க நிர்வாகிகள், அரசாங்கத்துடன் நெருக்கமான உறவு கொள்வது போல், நடுத்தர வர்க்க அமைப்புகள் செய்ய முடிவதில்லை என்பதனால் பயன்பெறவில்லை' என்கிறது, "நேஷனல் அலையன்ஸ் பார் பீப்பிள்ஸ் மூவ்மென்ட்' என்ற அமைப்பு.
உலக வங்கி, சர்வதேச நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நிறுவனங்களிடம் இந்தியா வாங்கியுள்ள கடன் தொகை, கடந்த ஆண்டு மட்டும் பல மடங்கு அதிகமாகி இருக்கிறது. இப்படியே கடன் சுமை உயர்ந்து கொண்டே போனால், நாடு தாங்காது. எனவே, வரி விதிப்பிலும், செலவினங்களிலும் உருப்படியான சீர்திருத்தங்கள் தேவை. கல்வி, வீட்டு வசதி இனங்களில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றால், வரி விகித வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். நலத்திட்டங்கள் பேசப்படும் அளவுக்கு செயல்படுத்தப் படுவதில்லை என்பதை விட வேதனையானது, சில இனங்களில் அதிகார வர்க்கத்தின் மெத்தனம் காரணமாக ஒதுக்கப்பட்ட நிதி, செலவழிக்கப்படாமல் கஜானாவுக்கே திரும்புகிறது. சில உதவிகள், உரியவர்களுக்கு போய் சேருவதில்லை, யாரோ சுருட்டிக் கொள்கின்றனர். அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் சாமர்த்தியமான பணக்கார உறவினர்களே, வீட்டு மனை, பயணம் போன்ற சலுகைகளை, "சமூக நல ஊழியர்' என்ற போர்வையில் பெறுகின்றனர். இதற்கென்று எதற்கு ஒரு பட்ஜெட்? இதேபோன்ற நிலை தொடரும் வரை, எல்லா பட்ஜெட்களும் வெறும் சடங்குகளாகவே இருக்கும், தேர்தல் அறிக்கைகள் போல! அதாவது, எதையும் சொன்னால் போதும், செய்ய வேண்டாம் என்றபடி. ஆயினும், தேர்தல் அறிக்கைகளுக்கும், நிதிநிலை அறிக்கைகளுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. முன்னதில் எழுத்துக்கள் அதிகம்; பின்னதில் எண்கள் அதிகம். ஆள்பவர்கள் எண்களை எடுத்துக் கொண்டு, எழுத்துக்களை மக்களுக்கு தருகின்றனர். அதுதான் பட்ஜெட்; அதுதான் ஜனநாயகம். இ-மெயில்: mailto:hindunatarajan@hotmail.
No comments:
Post a Comment