தமிழகத்தின் வேறெந்த பெரு நகரத்துக்கும் கிடைக்காத பெருமை, கொங்கு மண்ணுக்குக் கிடைத்திருக்கிறது. சங்கத் தமிழுக்கு செம்மொழி என்னும் தங்க மகுடம் கிடைத்ததற்காக, பொங்கு தமிழர்களெல்லாம் சங்கமித்துக் கொண்டாடிய, முதலாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெருமைதான் அது.
இப்படியொரு பிரமாண்டத்தையும், பிரமிப்பூட்டும் கூட்டத்தையும் கோவை நகரம் முன்னெப்போதும் கண்டதில்லை. முந்தைய உலகத் தமிழ் மாநாடுகளை எல்லாம் மிஞ்சுகிற கூட்டம், செம்மொழி மாநாட்டுக்கு வந்தது என்பதை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஐந்து நாட்களில் ஆறு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்தது அரசு. ஆனால், மாநாட்டு நாட்களிலும், நீட்டிக்கப்பட்டுள்ள கண்காட்சி நாட்களிலும் வரும் மக்களின் எண்ணிக்கை, 10 லட்சத்தைத் தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த வகையில், இந்த மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதும் உண்மை. தமிழுக்கு இன்னொரு முறை இப்படியொரு மாபெரும் திருவிழா நடத்தப்படுமா, அது இந்தளவுக்கு வெற்றி பெறுமா என்பதெல்லாம் சந்தேகமே. அதேநேரத்தில், இதெல்லாம் வேடிக்கை பார்க்க வந்த கூட்டமா, உணர்வோடு ஒன்று கூடிய கூட்டமா என்றொரு சிக்கலான கேள்வி எழுவதையும் தவிர்க்க முடிவதில்லை.
தமிழுக்காக நடத்தப்பட்ட இந்த மாநாட்டால் தமிழ் எந்த அளவுக்கு பாதுகாப்பு பெறும் அல்லது வளர்க்கப்படும் என்பதெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். இந்த மாநாட்டை எந்த நோக்கத்தில் கருணாநிதி நடத்தியிருந்தாலும், அதில் தமிழின் மீதான அவரது தீராக்காதலும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான், தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுமாறு தமிழறிஞர்களைக் கேட்டுக் கொண்டார் முதல்வர். அரசியல் தலைவர்களிடமும் இதையே எதிர்பார்த்தார் அவர். எல்லோரும் சொல்லும் ஆலோசனைகளின் அடிப்படையில் அறிவிப்புகள் வருமென்றும் அவர் உறுதியளித்தார். நிறைவு விழாவில் இடம் பெறும் தனது பேச்சு, இன்னொரு "பட்ஜெட்' உரையாக இருக்குமென்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் தூண்டி விட்டுள்ளார். ஆனால், முதல்வர் கேட்ட ஆணையையும், ஆலோசனைகளையும் வழங்கியிருக்க வேண்டிய வேண்டியவர்கள், அந்த கடமையைச் செய்தார்களா என்றால் இல்லவே இல்லை. ஆய்வரங்கத்தில் நல்ல பல தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன; ஆய்வுக் கட்டுரைகளில் ஆழ்ந்த கருத்துக்களும் தென்பட்டன. முதல் முதலாய், இலக்கியத்தோடு இணையம் சேர்ந்ததைப் போல, தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைய மாநாடும் இணைந்தே நடந்தது. கண்காட்சியும் தமிழினத்தின் பழமையை, பாரம்பரியத்தை, நாகரிகத்தை இந்த தலைமுறைக்குச்சொல்லும் விதத்தில் நன்றாகவே உள்ளது. பழமையான இலக்கிய நிகழ்வுகளை நினைவூட்டிய எழிலார் பவனியும் புதுமையாகவே இருந்தது. இப்படி எல்லாவற்றிலும் தமிழின் வாசம் இருந்தது; ஆனால் தமிழ் சுவாசமாய் இல்லை.
தமிழை வளர்த்தெடுக்க அரசே ஆலோசனை கேட்கும் அற்புதமான வாய்ப்பை அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் அப்பட்டமாகத் தவற விட்டார்கள். மாறாக, அதிகார மையங்களுக்கு புகழ் பாடக் கிடைத்த வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொண்டனர். ஆய்வரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம் எல்லாவற்றிலும் புகழ்ப்பாக்களே அதிகம் இடம் பெற்றன. சில அறிஞர்கள், கட்டுரைத் தலைப்புகளிலேயே, தங்களது தீவிர விசுவாசத்தை வெளிப்படுத்தினர். கட்சி மேடைகளில் சரவெடியாய் தமிழ் பொழியும் பல அரசியல் தலைவர்களும், மாநாட்டு மேடையில் துதிபாடிகளாய் மாறிப் போயினர். ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்கள், அரசியல் மாநாடு நடத்தினாலும், அரசு விழா நடத்தினாலும் இத்தகைய துதிபாடல்களைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால், செம்மொழி மாநாட்டில் செவியிரண்டும் கிழிந்து போகும் அளவுக்கு, பலரும் உரக்கத் துதி பாடியது, முதல்வருக்கே சற்று நெருடலாய் இருந்திருக்க வேண்டும். இதையெல்லாம் தாண்டி, தமிழை வளர்ப்பதற்கான பல நல்ல ஆலோசனைகளையும் இந்த மாநாட்டில் பலர் வழங்கியிருக்கிறார்கள். தமிழை அறிவியல் மொழியாக மாற்ற வேண்டும்; தமிழ் வளர்ச்சித்துறையை நிறுவனமாக மாற்றி, வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் தமிழைப் பரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில், பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும்; மேல்நிலைக் கல்விகளில் தமிழுக்கு முக்கியத்துவம் தர வேண்டும், கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும்...என இந்த பட்டியல் நீள்கிறது. இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து, அதன் அடிப்படையில் சிறப்பு மிக்க முக்கிய அறிவிப்புகளை முதல்வர் இன்று வெளியிடுவார் என்பது பலரது எதிர்பார்ப்பு. தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கும் தமிழும், தடங்களை இழந்து வரும் தமிழினமும், தமிழ்நாடும் தலை நிமிர வேண்டுமென்பது பலரது விருப்பம். இதையெல்லாம் உணராதவரில்லை முதல்வர் கருணாநிதி. அவரே "பட்ஜெட்' போல அறிவிப்பு என்றதும், பலருக்குள்ளும் படபடப்பு அதிகரித்திருக்கிறது. சரித்திரத்தில் பதிவு பெறப்போகும் இப்படியொரு மாநாட்டில் அவர் வெளியிடும் அறிவிப்புகளும் வரலாற்றுச் சிறப்புடையதாக இருக்குமென்பதில் யாருக்கு மாற்றுக்கருத்து இருக்கும்?
நன்றி :- தினமலர்
No comments:
Post a Comment