காதல் வயப்படுவது சுலபம். ஆனால், அதைத் திருமணம் வரை கொண்டு செல்ல வேண்டுமானால், மலையையே அசைத்துப் பார்க்கிற மாதிரியான நிலை இருக்கிறது. ஜாதி, மதம், பெற்றோர் எதிர்ப்பு, வருமானம் என பல தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது. காதலில், "சுபம்' என்ற முடிவை எட்ட வேண்டுமானால், நீங்கள் வணங்க வேண்டியது பெருமாளின் கூர்மாவதாரத்தை தான்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், எக்காலமும் சண்டை நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில், தேவர்களின் பலம் கடுமையாகக் குறைந்தது; அசுர சக்திகள் ஓங்கின. தேவர்கள் பலர் கொல்லப்பட்டனர். "இனியும், தேவர்களின் எண்ணிக்கை குறைந்தால், உலக இயக்கத்துக்கே தடை ஏற்படும்...' என்று சிவவிஷ்ணுவிடம், தேவர்கள் முறையிட்டனர். தேவர்கள் தாக்கப்பட்டாலும், அவர்களுக்கு மரணமில்லாத பெருவாழ்வு வழங்க வேண்டும் என்று சிவவிஷ்ணு முடிவு செய்தார். இதற்கான பொறுப்பை விஷ்ணு தானாக முன்வந்து ஏற்றார்.
நாம் மற்றொருவருக்காக ஒரு வேலை செய்து கொடுக்க வேண்டியிருந்தால், "நாளை பார்த்துக் கொள்ளலாமே...' என மந்தகதியில் இருந்து விடுவோம். அவருக்கு செய்யும் வேலையிலேயே, நமக்கும் ஒரு லாபம் இருக்கிறது என்றால், உடனே களத்தில் குதித்து விடுவோம். விஷ்ணுவும் இந்த ரகம் தான். தேவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினால், அதிலே அவருக்கு ஒரு லாபம் உண்டெனத் தெரியும். என்ன லாபம்? மகாலட்சுமி என்னும் பேரழகி அவருக்கு கிடைப்பாள். இப்போதும் கூட உலகத்தில், பெண் பார்க்கச் செல்பவர்கள், "பெண் மகாலட்சுமி மாதிரி இருக்கிறாளே...' என்று கூறும் பழக்கம் இருக்கிறது.
தேவர்களின் உயிர் காக்க, பாற்கடலைக் கடைந்து, அதில் கிடைக்கும் அமுதத்தை எடுத்து தேவர்களுக்கு கொடுப்பதென முடிவாயிற்று. மந்தாரமலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி, கடலைக் கடைய முற்பட்டனர். ஆனால், கடலுக்குள் சிக்கிய மலை, அசைய மறுத்தது. கீழே ஏதாவது ஆதாரம் இருந்தால் தானே மலை சுழலும் என்ற நிலையில், விஷ்ணு தன்னை கூர்மம் (ஆமை) ஆக்கி, கடலுக்குள் சென்றார். மலையை முதுகில் தாங்கினார். இலகுவாக கடல் கடையப்பட்டது.
அமுதம் வருவதற்கு முன், மகாலட்சுமி அந்தக் கடலில் இருந்து வெளிப்பட்டாள். பல தேவர்களும் அவளை மணந்து கொள்ள முன் வந்தாலும், தனக்காக சிரமப்பட்டு மலையை முதுகில் சுமந்த விஷ்ணுவுக்கே அவள் மாலை சூட்டினாள்.
பெருமாளின் தசாவதாரம், பல பெருமாள் கோவில்களில் சிலை வடிவில் உள்ளன. ஆனால், தசாவதாரத்துக் கென்றே ஏற்படுத்தப் பட்ட கோவில், ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் இருக்கிறது. இங்கு பத்து அவதாரங்களும் மூலஸ்தானத்தில் உள்ளன. இதில், மச்சம் (மீன்) மற்றும் கூர்ம (ஆமை) அவதாரங்கள், அவதார நிலையிலேயே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளன. அதாவது, மீன் மற்றும் ஆமை வடிவிலேயே பெருமாளை தரிசிக்கலாம்.
ஒரு பொருளுக்கு மனிதன் ஆசைப்படலாம். ஆசைப்பட்டது கிடைத்து விட்டால், அதையே காரணமாக்கி ஆட்டம் போடக்கூடாது என்பதற்கு, கூர்ம அவதாரம் சான்று கூறுகிறது. ஆமை ஒரு ஓட்டுக்குள் தன்னை உள்ளடக்கி இருப்பது போல, வசதி வரும் காலத்தில், ஐம்புலன்களையும் அடக்கி வாழ வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. மகாலட்சுமியை, மகாவிஷ்ணு மனைவியாக அடைந்தார். ஆனால், அவளது செல்வத்தை அவர் சிறிதளவும் அனுபவித்ததில்லை. கூர்மம் போல அடக்கத்துடன் செயல்பட்டார்.
நினைத்தவரை கைப்பிடிக்கவும், எவ்வளவு வசதி வந்தாலும் பண்பு கெடாமல் வாழவும், பெருமாளின் கூர்மாவதாரத்தை
வணங்குங்கள்.
No comments:
Post a Comment