Saturday, June 9, 2012

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு!

BBA படித்த ஒரு பெண் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த மாணவனை (வயது 17 ) திருமணம் செய்து இரண்டுமாதம் வாழ்ந்துவிட்டு தனது தாய்,தந்தை ஆசிவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்கு ஜோடியாக வருகிறார்கள். அனுபவங்களை இருவரும் பகிர்கின்றனர்.திடீரென உறவினர்கள் வருகிறார்கள் வளர்த்த பெண் இப்படி பண்ணிவிட்டதே என அப்பா மகளை ஒரு அடி கொடுக்க, மனைவியை அடித்த உடன் இந்த பையன் மாமனாரை அடிக்கிறான். மனைவியான பெண் எப்படி எங்க அப்பாவை அடிக்கலாம்? என்று தாலியை கழட்டி கொடுத்து விட்டு பெற்றோருடன் செல்கிறாள். யாரென்று தெரியாத இருவர் இவர்களுக்கு வீடு,வேலை எல்லாம் பார்த்து பாதுகாப்பு கொடுத்துள்ளனர். வேறு யாரிடமாவது மாட்டி சின்னாபின்னமாகி விடக்கூடாதே என்று.ஒரு வேளை இந்த நிகழ்ச்சிக்கு வராமல் இருந்திருந்தால் சந்தோசமாக இருந்திருப்பார்களோ?என்னவோ? தொடர்ந்து ஒருசில நிகழ்சிகளை பார்த்தேன் மனது பயங்கரமான வலி.என்னுள் பல கேள்விகள்.முடிந்தால் யோசியுங்கள்.

(1 ) 13 அல்லது 14 வயதில் திருமணம் செய்பவர்கள் காதலித்தோ அல்லது பெற்றோர் சம்மதத்துடனோ

 (2 ) காதலித்து வீட்டை எதிர்த்து ஓடியபின் கள்ள உறவு( இருபாலரும்)

 (3 )பெத்த பிள்ளைகளை விட்டு விட்டு இன்னொருத்தருடன் ஓடுவது

(4 )எழுத படிக்க தெரியாதவனுடன் என்ன ஏது விசாரிக்காமல் இரண்டு மூன்று பேர் காதல் வலையில் விழுவது

(5 ) நீண்ட வயது வித்தியாசம்

(6 ) கணவனை பார்த்து அவன், இவன், வா, போ என அழைப்பது

 (7 )அளவுக்கதிகமான ஆடம்பர ஆசை

 (8 ) மிக அழகாக இருப்பவர்கள் பொருத்தமே இல்லாதவர்களுடன் காதல் மயக்கத்தில் ஓடுவது

 (9 )திருமணம் ஆகும் முன்பே சிறுவயதில் காதல் வயப்பட்டு பாலுறவில் ஈடுபடுவது பின்பு கருவை கலைக்க படாத பாடுபடுவது

(10 )பெற்றோரையும் உறவினரையும் தலை குனிய வைப்பது

(11 )சொத்து வேண்டும் பெற்றோருக்கு சோறு கொடுக்க மறுப்பது

 ( 12 ) பொருளாதார பின்னணிகளை ஆராயாதது

 ...........இன்னும் .......இன்னும் .....நிறைய?


 ஏன் இந்த நிலை?ஏன் இந்த அவசரம்? " வெறும் உடலுறவு" மட்டும் தான் வாழ்க்கையா? இதில் அதிகம் பாதிக்கபடுவது பெண்கள்தான். "இளமறி தளையறியாது" என்பார்கள் அறியாதது யாருடைய தவறு?பெண்ணுக்கு நிச்சயத்துடன் திருமணம் நின்றாலோ,இரண்டாவது திருமணங்கள் செய்தாலோ அவர்களை திருமணங்கள் செய்பவர்கள் சின்ன சண்டை என்றால் கூட குத்தி குத்தி காயபடுத்துகின்ற கொடுமை சம்பவங்கள் அதிகம் ஆனால் வெளியே அந்த ஆடவன் "தியாகி"போல திரிவான்.அந்த பெண்களின் நிலை மிக பரிதாபம்.இதில் அதிகம் படித்த பெண்களும் சிக்கி கொள்கிறார்கள்.அதிகமாக நகரத்து பெண்கள் குறிப்பாக வாடகை வீடுகளில் இருப்பவர்கள். கிராமங்களில் இது இல்லாமலில்லை.ஆனால் அங்கே உறவினர்கள் கன கச்சிதமாக தீர்த்து வைத்து விடுகிறார்கள். கிராமங்களில் உள்ள பெண்பிள்ளைகள் ஆண் நண்பன் என்று வீடுகளுக்கு அழைத்து வருவது மிக அரிது. தெருக்களில் நின்று அதிகம் பேசினால் என்ன "பல்லை காட்டுகிறாய்" என்கிற கண்டிப்புகள்,விளக்கு வைத்தால் வெளியில் செல்ல கூடாது என்கிற கண்டிப்புகள் ஓரளவு இவர்களின் ஒழுக்க முறைகளையும்,கற்பையும் காக்கின்றன என்பதனை முழுமையாக மறுக்க முடியாது.ஆனால் நகரங்களில் இந்த பராமரிப்புகள் மிக குறைவு.ஆண்-பெண் இருபாலருக்கும் அளவு கடந்த சுதந்திரம் பணப்புழக்கம் "எளிதாக ஆக்கவும் அழிக்கவும்" தெரிந்து வைத்துள்ளார்கள்.திருமண பந்தங்களுக்குள் நுழைய சில அடிப்படைகள் உள்ளதை அறிய மறந்து விடுகிறார்கள் காதலை கண்மூடித்தனமாக மனதில் வைத்து கொண்டு.சில திரைப்படங்களில் நகரத்து பெண்களை மனைவியாக தேர்வு செய்யும் போது சல்லடை போட்டு அரித்து தான் தேர்வு செய்ய வேண்டும் என்பதனை கேட்கும் போது மனது இவ்வளவு கீழ்த்தரமாக சித்தரிகிரார்களே என கோபம் வந்ததுண்டு. இப்போது சிறிது யோசிக்கிறேன்.காதலித்து வீட்டைவிட்டு ஓடும் முன்,உறவு கொடிகளை,உடன்பிறப்புகளை, பெற்றோரை சிறிது நினையுங்கள்.பொறுமையுடன் செயல்படுங்கள் பொருளாதார நிலைகளை உயர்த்துங்கள்.அவசர கதியில் ஓடாதீர்கள்.நீங்களாகவே வாழ்க்கையினை தேர்வு செய்தபின் "ஊடகங்களின் முன் ஒப்பாரி" வைப்பது எந்த விதத்தில் நியாயம்.அவர்களிடம் கவுன்சிலிங் சென்று சட்டப்படி பிரிய போவது எனில் உங்களின் முகங்களை ஊடகங்களில் பகிரங்கமாக காட்டினால் அடுத்து ஒரு வாழ்க்கை அமைக்க சிரமப்படவேண்டும் என்பதனை கூட புரிய
 
மறுக்கிறீர்கள்.ஊடகங்களும் எண்ணுவதில்லை. நீங்கள் சாதனை புரிந்ததற்காக ஊடகத்தின் முன் போய் நிற்கவில்லை உங்களைபார்த்து சந்தி சிரிப்பதர்க்காக போய் நிற்கின்றீர்கள் என்பதனை உணர்ந்து உங்களின் முகங்களை மறைக்க சொல்லுங்கள்.பின்பு அமைய இருக்கும் வாழ்விற்கு அது பாதுகாப்பு. இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். இறுதியாக தற்போது காதலிப்பவர்களுக்கும்,காதல் திருமணம் செய்ய இருப்பவர்களுக்கும் "எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு". நிறைந்த அன்புடன்................... டாக்டர்.எ.ஜோசப்.லண்டன்...

No comments:

Post a Comment