ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தனி நபரின் வருமானத்தை அளவுகோலாக
கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு குடும்பமோ அல்லது தனி மனிதனோ பொருளாதார
தன்னிறைவு பெறாத வரையில், அது ஏழ்மையின் அடையாளமாகவே கொள்ளப்படும். தனி
மனிதனின் ஏழ்மைக்கு காரணம், அவனது செலவுகள், வரவை மிஞ்சியதாக இருப்பது
தான். வரவை மிஞ்சிய செலவு நீடிக்கையில், மனிதன் கடனாளியாகிறான். அக்கடனை
அடைக்க வழி இல்லாத போது, திவாலாகி நடை பிணமாகிறான்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள், மக்கள் நலனை குறிக்கோளாக கொண்டு செயல்படுவது தான், மக்களாட்சியின் தத்துவம். அதை விடுத்து, மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படும் போது, மக்கள் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. இதற்கு காரணம் மத்திய, மாநில அரசுகளின் தவறான பொருளாதார கொள்கைகளே. திட்டங்கள் தீட்டுவதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள கோளாறுகளும், குறைபாடுகளும் தான், நாட்டின் பொருளாதாரப் பின்னடைவுக்கு அடிப்படை காரணங்களாக அமைகின்றன. மக்களின் பங்களிப்பு எவ்வகையில் அமைய வேண்டும் என்ற கேள்விக்கு, விடையாக இருப்பது, வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுவதும், உற்பத்தி திறனுடன் கூடிய வருமானத்தை அதிகப்படுத்துவதும் தான். இதை நிறைவேற்றுவதன் மூலம், தனி நபர் வருமானம் உறுதி செய்யப்படுவதோடு, அவனது வங்கி சேமிப்பும் அதிகரிக்கிறது. அப்போது, அவனுடைய வாங்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இதுவே சீரான பொருளாதார தன்மையை நோக்கி பயணிக்க உதவுகிறது. விலைவாசி உயர்வாலும், பண வீக்கத்தாலும் அச்சமோ, கவலையோ கொள்ளும் நிலை தவிர்க்கப்படுகிறது.
இத்தகைய சூழலை உருவாக்க என்ன செய்ய வேண்டும்? ஆண்டுதோறும் திட்டங்களை அதற்கேற்றாற் போல் தீட்டி, செயல்படுத்துவது தான் அதற்கு ஒரே வழி. இதற்கு, தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும், வளர்ச்சியை மைய இலக்காக கொண்டு அமைய வேண்டும். வரவினங்களை பெருக்கி, செலவினங்களை குறைத்து, நம் பட்ஜெட்டுகள் அமைய வேண்டும். அதற்கு முக்கியமாக, இலவச திட்டங்களையும், மானியங்களையும் அறவே கைவிட வேண்டும். அப்போது தான் நமது பட்ஜெட்டுகள் செலவுகளை அதிகமாக கொண்டிராது. அப்போது தேவையற்ற வரிகளை விதிக்க வேண்டிய நிர்பந்தமோ, கட்டாயமோ ஏற்படாது. நமது அரசியல் கட்சிகள் அனைத்துமே, தேர்தலில் வெற்றி பெறுவதையே குறிக்கோளாக கொண்டு, இலவச திட்டங்களை கணக்கு வழக்கில்லாமல் அறிவித்து, செயல்படுத்தி வருவது தான், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது. பல துறைகளிலும், நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டுமானால், அதற்கு போதிய நிதி ஆதாரம் தேவை. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, பொதுப்பணித் துறை போன்ற அனைத்து துறைகளும், செலவினங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கையில், தொழில் துறையும், வேளாண் துறையும் மட்டுமே, நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு உதவுபவைகளாக இருக்கின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவைகளாக இருக்கிற வேளாண் மற்றும் தொழில் துறைகளை, நமது அரசுகள் புறக்கணித்து வருவதாலேயே, நாம் பொருளாதார பின்னடைவை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இதை கருத்தில் கொண்டு, தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கும் செயல் ஊக்கம் தராது, கிராமங்கள் தோறும் வங்கிக் கிளைகள் திறப்பதன் மூலம், எந்த பயனும் கிடைத்து விடப் போவதில்லை. விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகக் கூறி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, மத்திய அரசு பல லட்சம் கோடிகள் செலவு செய்து நிறைவேற்றி வருவது, பூனை கண்ணை மூடி, பூலோகமே இருண்டு விட்டதாக கூறுவது போல் உள்ளது. தற்போது, இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு நேரடியாகவே பணம் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே வேலை ஆட்கள் பற்றாக்குறை, இடுபொருட்களின் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு கட்டுபடியாகாத விலை ஆகிய காரணங்களால், விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்திட்டம் கிராமப்புற மக்களை சோம்பேறிகளாக ஆக்கவே பயனுள்ளதாக இருக்கிறது. இதனால், இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு பதில், விவசாய தொழிலுக்கு மூடுவிழா கொண்டாடவே வழிவகுக்கப்பட்டுள்ளது.
வேளாண் உற்பத்திக்கும், ஊரக தொழில் வளர்ச்சிக்கும் தேவைப்படுவது தண்ணீரும், மின்சாரமும் தான். அத்துடன் டீசல், பெட்ரோல் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இவை அனைத்தும் விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். ஆனால், இதில் நமது அரசுகள் போதிய கவனம் செலுத்துவதில்லை. அதற்கான காரணமும் நமக்கு புரியவில்லை. தண்ணீரும், மின்சாரமும் நம் கைவசமே உள்ளன. இதை ஏனோ, நமது அரசியல் விற்பன்னர்கள் அறியாமல் உள்ளனர் என்பது, மற்றொரு கேள்விக்குறி. வற்றாத ஜீவநதிகளான கங்கை, பிரம்மபுத்திராவின் பெருவாரியான தண்ணீர், நாள்தோறும் கடலில் வீணாக கலந்த வண்ணம் உள்ளது. அந்நீரை, ஆறுகள் இணைப்பு, புதிய கால்வாய் அமைப்பதன் மூலம், தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு பகிர்ந்துஅளிப்பதில், என்ன தடை உள்ளது? ஆறுகள் இணைப்பு சாத்தியமானது தான் என்று தெரிந்திருந்தும், அதை செய்யாது, மாநிலங்களுக்கிடையே நீரை பகிர்ந்து கொள்வதில் மோதல் போக்கை உருவாக்குவதில் குறியாக இருக்கும் மத்திய அரசை, மக்கள் விரோத அரசு என்று கூறுவதை விட, வேறு எப்படிக் கூறுவது? மின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிற, காற்றாலை மற்றும் சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தியை பெருக்க, அனைத்து வசதிகளும் நம் நாட்டில் இருக்கையில், இம்முயற்சியில் அக்கறை காட்டாது இருக்கும் நம் மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத் தனத்தை என்னவென்று கூறுவது? நாட்டின் ஒட்டுமொத்த தேவையில், 30 சதவீதம் பெட்ரோல், டீசல் நம் நாட்டிலேயே கிடைக்கிறது. மீதமுள்ள பெட்ரோல், டீசல் தேவையை ஈடுகட்ட மாற்று வழிகள் காண, இதுவரை நமது அரசுகள் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. எடுத்ததற்கெல்லாம் இறக்குமதி செய்வது எனும் கொள்கையை, நம் மத்திய அரசு கடைபிடிப்பதால் தான், உலகச் சந்தையில், நம் ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதற்கும், அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து கொண்டே வருவதற்கும், காரணமாக இருக்கிறது. ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரிப்பதால், நமது பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. நமது பணம் நம்மை விட்டுப் போகாமல், நமக்குள்ளேயே பகிர்ந்து கொள்ளப்படுமாயின், இத்தகைய சீர்கேட்டை நாம் சந்திக்க வேண்டியது இருக்காது. முதலில் நம் நாட்டிலேயே கிடைக்கிற பொருட்களை, அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கை, மத்திய அரசு கைவிட வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில் நமது ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையை வடிவமைக்க வேண்டும். லாபகரமான ஏற்றுமதி கொள்கை, நம் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கவும், ரூபாயின் மதிப்பு உயரவும் வழிவகுக்கும். தகவல், தொழில்நுட்ப துறையில், நம் நாடு வளர்ச்சி அடைந்திருக்கிற அளவிற்கு, வேளாண் மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சி எட்டப்படவில்லை. இதற்கு காரணம், நம் தவறான பொருளாதார கொள்கை தான்.
நமது நில வளம், நீர் வளம் நல்ல விதத்தில் பயன்படுத்தப்படாததும், மனித சக்தியை வீணாக்குவதுமே இதற்கு முக்கிய காரணங்கள். அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்காமல் இருப்பதும், புதிய தொழில்நுட்பங்களை கையாளாததும், நமக்கு பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தரமான பொருட்களை தயாரித்து, உலகச் சந்தையில் நம் பொருட்களுக்கு மவுசு ஏற்படாத வரையில், தற்போதைய பொருளாதார தேக்க நிலை நீடிக்கவே செய்யும். தரிசு நில மேம்பாடு, சொட்டு நீர் பாசனம், நவீன தொழில்நுட்பம், இயற்கை உரமிடல், கால்நடை அபிவிருத்தி, குடிசை தொழில்கள், பால், முட்டை உற்பத்தி, அவற்றை சந்தைப்படுத்துதல் ஆகியவை வேளாண் தொழில் சிறக்க உதவும். நம் நாட்டில், எத்தனையோ விதமான கச்சா பொருட்கள், இயற்கையாகவே மிக அதிக அளவில் கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு, நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்க, அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். கடல் வாழ் பிராணிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, போதிய வசதி, வாய்ப்புகளை மீனவர்களுக்கு செய்து தரவேண்டும். இவற்றையெல்லாம் மனதில் கொண்டு திட்டங்களை தீட்டி, அவற்றை முறைப்படி செயல்படுத்தினால், நம் நாடு உலகில் நம்பர் ஒன் நாடாக திகழும் என்பதில், எவ்வித ஐயமும் இல்லை. அதற்கு, முதலில் நம் அரசியல்வாதிகள், மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்களாக இராமல், மக்கள் பணத்தை மக்களுக்கே செலவு செய்யும் வெள்ளை உள்ளம் படைத்தவர்களாக இருக்க வேண்டும்.
இ-மெயில்: krishna_samy2010@yahoo.com
ஜி.கிருஷ்ணசாமி, கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் (பணி நிறைவு) எழுத்தாளர், சிந்தனையாளர்
No comments:
Post a Comment