Saturday, October 12, 2013

இது நமக்குத் தேவையா?

காற்று வாங்கப்போய் காதல் வாங்கி வருவதில் தவறில்லை. ஆனால் ஊசி வாங்கப் போய் ஊரையே வாங்கி வருவது அவசியமா? இன்று இதுதான் நடக்கிறது. வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் வீட்டைப் பூட்டிக்கொண்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் கிளம்பி விடுகிறார்கள். கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கிக் குவிக்கிறார்கள். காதில் கேட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு வருகிறார்கள். அதுவும் தீராமல் அடுத்த வாரத்துக்கும் சிலவற்றைத் திட்டமிட்டே திரும்புகிறார்கள். மக்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த நுகர்வு கலாச்சாரம் எப்படி வந்தது?
அடுத்தவருக்காக வாழ்வதும் அடுத்தவரைப் பார்த்து வாழ்வதும்தான் முதலிரண்டு காரணங்களாக நிற்கின்றன. இது இல்லை என்றால் அவர்கள் என்ன சொல்வார்கள்? அதை வாங்கவில்லை என்றால் இவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்புக்குத் தீனிபோடவே பலர் பல பொருட்களை வாங்குகிறார்கள். கொட்டாவி போலத்தான் ஷாப்பிங் செய்வதும். ஒருவர் நகவெட்டி வாங்கினாலும், அந்தத் தெருவில் இருக்கிற அனைவரும் அதையே வெவ்வேறு வடிவங்களிலும் தரங்களிலும் வாங்கிவிடுவார்கள்.
அடுத்ததாக மக்களிடம் பொங்கிப் பிரவாகிக்கும் அழகுணர்ச்சி. இதை இந்தக் கோணத்தில் பார்த்தால் எவ்வளவு அழகு என்று சிலாகித்தே பல பொருள்களை வீட்டில் சேர்த்திருப்பார்கள். சுவரில் மாட்டுகிற ரோஜாக்கள் சிரிக்கிற அட்டையில் துவங்கி, தரையில் ஒட்டுகிற ஸ்டிக்கர் கோலம் வரை இவர்களின் அழகுத் தேடல் நீண்டுகொண்டே செல்லும். சில மாதங்கள் கழித்து இவற்றில் பல குப்பைத் தொட்டிகளில் பரிதாபமாய் முழிக்கும். குப்பையும் செல்வமாகும் என்பதை மாற்றிச் செல்வமும் குப்பையாகும் என்பதை நிரூபிக்கும் வித்தகர்கள் இவர்கள்.
மக்களை மாபெரும் நுகர்வோர்களாக மாற்றியதில் ஊடகங்களின் பங்கு இல்லாமலா? அவை காட்சிப்படுத்துகிற கவர்ச்சி விளம்பரங்களை நம்பித்தான் இன்று பல முதலாளிகள் பெரும் முதலாளிகளாகிக்கொண்டிருக்கிறார்கள்.
பிரபல நடிகர் பரிந்துரைக்கிற காபியைக் குடித்தால்தான் நம் தந்தையின் மனதையோ, மனைவியின் அன்பையோ புரிந்துகொள்ள முடிகிறது. காலை வேளையில் போருக்குத் தன் சேனைகளைத் தாயார்படுத்தும் தாய்மார்கள் பெயரே வாயில் நுழையாத ஏதேனும் வஸ்துவைச் சாப்பிடச் சொல்லிக் கொடுப்பார்கள். கௌரவமான அந்தக் காலை உணவை முடிக்காவிட்டால் இந்தச் சமூகத்தில் நம் அந்தஸ்து என்னாவது? அதை அப்படியே படம் பிடித்து ஃபேஸ்புக்கிலும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யலாம் என்பது கூடுதல் வசதி!
கால் செருப்பு பிய்ந்து போனதெற்கெல்லாம் வகை தொகை இல்லாமல் ட்ரீட் கேட்கும் நண்பர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே கையைக் கடிக்காத விலைகளில் (அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்) புதுப்புது பானங்களையும் நொறுக்குத் தீனிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். வாழ்க்கையைக் கொண்டாட இது போதாதா நமக்கு? அவற்றின் எடையோ, தரமோ நாம் கொடுக்கிற பணத்துக்கு ஈடாகுமா என்ற கவலை நமக்கெதற்கு? உறைகளைப் பாருங்கள். அவைதான் எவ்வளவு பளபளப்பாக, அழகாக இருக்கின்றன! அது போதாதா?
இவை போதாதென்று நம் மனநிலை புரிந்தே புதுப்புது திட்டங்களை அறிமுகப்படுத்துவார்கள் சில வணிகப் புலிகள். கையில் பணம் இல்லையென்றால் என்ன? சுலபத் தவணைத் திட்டத்தில் சேர்ந்து மாபெரும் லாபம் அடைய வலைவிரிக்கின்றன அங்காடித் தெருக்கள். புடவையோடு பிரஷர் குக்கரையும் சேர்த்தே வாங்கச் சொல்லி வற்புறுத்துகின்றன தள்ளுபடிச் சலுகைகள்.
இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியம் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற நம் மக்களின் மனநிலைதான். அவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே இருந்த தாம்புக் கயிறு இடைவெளியை நூலிழையாக்கிவிட்டு அதையும் சில நொடி தயக்கத்துக்குப் பிறகு அறுத்தெறிந்துவிடுகிறோம். எதைப் பார்த்தாலும் வாங்கத் துணிகிறபோது, எச்சரிக்கும் மனசாட்சியைத் துச்சமாக நினைத்துத் தவிர்த்துவிடுகிறோம். உலகமயமாக்கலின் விளைவாகப் பல்கிப் பெருகியிருக்கும் வியாபாரச் சுழலில் விரும்பியே சிக்குகிறோம். நாம் அனைவரும் நல்ல வாடிக்கையாளர்கள்தான். ஆனால் இதுவே வாடிக்கையாகிவிடக் கூடாது.
வாங்கப்போகும் பொருட்களின் பட்டியலோடு ஷாப்பிங் செல்வது நல்லது. எதை வாங்குவதாக இருந்தாலும் அந்தப் பொருள் இல்லாமல் எந்தெந்த வேலைகள் தடைபடும், அதனால் நிகழப்போகும் ஆக்கப்பூர்வமான மாற்றம் என்ன என்பதை மனதில் வைத்து அந்தப் பொருளை உங்கள் பட்டியலில் சேருங்கள். அழகுணர்ச்சி தேவைதான். அதுவே நம் மன அழுத்தத்தை அதிகரித்துவிடக்கூடாது. தேவையில்லை என்றால் அது சும்மா கிடைத்தாலும் வேண்டாம் என்ற மனநிலைக்கு மாற வேண்டும். எல்லாவற்றையும் விட மிக முக்கியம், எது தேவையோ அந்தப் பொருள் மீது மட்டும் கண்கள் இருக்க வேண்டும். தவறியும் பக்கத்துப் பொருட்களின் மீது பார்வை திரும்பினால், பணம் திரும்பாது.
விஷயம் இதோடு முடிந்துவிடவில்லை. வீட்டுக்குத் திரும்பியதும் நீங்கள் வாங்கிய தேவையில்லாத பொருட்களின் பட்டியலைத் தயார் செய்யுங்கள். என்னதான் திட்டமிட்டுக் கிளம்பினாலும் யானைக்கும் அடி சறுக்குவது சகஜம்தானே. இரண்டு பட்டியல்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதற்கு மேலும் நீங்கள் வாங்கிய பொருட்கள் தேவையானவைதான் என நினைத்தால், நீங்கள் மிகச் சிறந்த வாடிக்கையாளருக்கான விருதைப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

Thanks to : The Hindu - Tamil

No comments:

Post a Comment