Sunday, July 11, 2010

என்ன தான் நடக்கிறது காஷ்மீரில்? அமைதிக்கு வேட்டு வைப்பது யார்?

மீண்டும் ஒரு முறை கலவர பூமியாக மாறி இருக்கிறது காஷ்மீர். கலவரத்தை கட்டுப்படுத்த, பத்தாண்டுகளுக்கு பின், முதல் முறையாக ராணுவம் வரவழைக்கப்படும் அளவுக்கு தற்போது நிலைமை மோசமாக மாறிப் போயிருக்கிறது. போராட்டம், கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை, துப்பாக்கிச் சூடு, உயிர் பலி என, காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகள் கலவரக் காடாக காட்சி அளிக்கின்றன. இந்த கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாக மத்திய அரசே வெளிப்படையாக தெரிவித்துள்ளது. காஷ்மீரில் அப்படி என்னதான் நடக்கிறது.


பிரிவினையில் துவங்கிய விபரீதம் : நாட்டு பிரிவினையின் போது துவங்கிய பிரச்னை, காஷ்மீரில் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது. காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு பகுதி இந்தியாவில் உள்ளது. இந்த எஞ்சிய பகுதியையும் தன் பக்கம் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக, தங்களது நாட்டில் பயங்கரவாத முகாம்களை உருவாக்கி, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை காஷ்மீருக்குள் ஊடுருவ வைத்து, வன்முறைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர், பாகிஸ்தான் ஆட்சியாளர்கள். சில நேரங்களில் காஷ்மீரைத் தாண்டியும் டில்லி, மும்பை என, பாக்., ஆதரவு பயங்கரவாதிகளின் கரங்கள் நீண்டு விடுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து காஷ்மீர் பிரச்னை இருந்து வந்தாலும், கடந்த 1987ல் இருந்து தான், வன்முறை அதிகம் பரவியது. அன்று துவங்கி கடந்தாண்டு ஜூன் வரை காஷ்மீர் கலவரத்தில் 47 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர்ப்பலி அதிகரித்தாலும், கலவரம் நின்றபாடு இல்லை.


பிரிவினைவாதிகளின் கைவரிசை : இந்தியா-பாக்., நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை காரணமாக சில காலமாக அடங்கிப் போயிருந்த வன்முறை, தற்போது மீண்டும் பற்றிக் கொண்டுள்ளது. காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலை திரும்பாமல் பார்த்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள், இங்கு செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பினர் தான். இவற்றிலேயே மிதவாத அமைப்பு, தீவிர அமைப்பு என இரு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இவர்களில் ஒரு தரப்பினர், காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்றும், மற்றொரு தரப்பினர், இந்தியாவிலேயே தொடர்ந்து தன்னாட்சி பெற்ற மாகாணமாக காஷ்மீர் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஏதாவது ஒரு காரணத்தை கூறி, அவ்வப் போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைப்பதே இவர்களின் பிரதான வேலை.


தற்போதைய கலவரத்துக்கு காரணம் என்ன?கடந்த 20 நாட்களுக்கு முன், காஷ்மீரின் சோபூரில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு இளைஞர் பலியானார். இந்த பிரச்னை தான், தற்போது காஷ்மீர் கலவரக் காடாக மாறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை கலவரம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஸ்ரீநகர், குப்வாரா, புலவாமா, பாரமுல்லா, புட்கம் ஆகிய மாவட்டங்கள், 20 நாட்களுக்கும் மேலாக முடங்கி கிடக்கின்றன. அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.


இதுவரை 15 பேர் பலி : ஊரடங்கு உத்தரவை மீறி, ஏராளமான இளைஞர்கள் வீதிக்கு வந்து, பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். போராட்டம் என்றால், சாதாரண போராட்டம் அல்ல. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காஷ்மீர் மாநில போலீசார் மீது, சரமாரியாக கற்களை வீசி தாக்குவது, சாலைகளில் தடைகளை ஏற்படுத்துவது போன்ற போராட்டங்களில் இவர்கள் ஈடுபடுகின்றனர். இந்த கல் வீச்சில் காயமடைந்த பாதுகாப்பு படையினர், திருப்பி தாக்கத் துவங்கி விடுகின்றனர். தடியடி, கண்ணீர் புகை ஆகியவற்றை தாண்டி, சில நேரங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர், பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். சில நேரங்களில், கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, வீட்டிற்குள் இருந்து, ஜன்னல் வழியாக கலவரத்தை பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி பெண் ஒருவர் மீதும் பாதுகாப்பு படையினரின் குண்டுகள் பாய்ந்தது தான் பரிதாபம்.


குடிசைத் தொழிலான கல்வீச்சு : பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவதை, ஸ்ரீநகர் இளைஞர்கள் தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆக்கி விட்டனர். கல்வீச்சில் பங்கேற்காத இளைஞர்களே இல்லை என்ற அளவுக்கு, இது ஒரு குடிசைத் தொழில் போலவே இது மாறி விட்டது. ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் வீதிகளுக்கு வந்து, பாதுகாப்பு படையினர் மீது ஆவேசத்துடன் கற்களை வீசுகின்றனர். சில நேரங்களில் தனியாக சிக்கிக் கொள்ளும் பாதுகாப்பு படையினரை, துவைத்து எடுக்கின்றனர். பாதுகாப்பு படையினரின் வாகனங்களையும் அடித்து சேதப்படுத்துகின்றனர். ஆறு வயது சிறுவர்களில் துவங்கி, 30 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்வீசுவது என்பது ஒரு சாகச செயலாகவே மாறி விட்டது. இந்த விபரீதம் தான், உயிர் பலி வரை கொண்டு போய் விட்டு விட்டது. அப்பாவி இளைஞர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களை பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபடச் சொல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பயங்கரவாத சதி : வன்முறையும், உயிர்ப்பலியும் அதிகரித்துக் கொண்டே போனதை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர்மட்ட குழு கூடி, இந்த பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தியது. காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும், கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தினார். காஷ்மீரில் சமீபகாலமாக நடந்த வரும் வன்முறை சம்பவங்களின் பின்னணி குறித்து மத்திய அரசு தெளிவாகவே அறிவித்தது.


இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:காஷமீரில் தற்போது நடந்து வரும் கலவரத்தின் பின்னணியில் தேச விரோத சக்திகளின் சதி உள்ளது. பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கும், இந்த கலவரத்துக்கும் தொடர்பு உள்ளது. இருந்தாலும், அமைதியான சூழ்நிலையை உருவாக்க, காஷ்மீர் மாநில அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார்.


ராணுவம் விரைந்தது : இதையடுத்து தான், தற்போது காஷ்மீருக்கு ராணுவம் விரைந்துள்ளது. 1,700 ராணுவ வீரர்கள் தற்போது ஸ்ரீநகர் உள்ளிட்ட கலவர பகுதியில் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு கூறுகையில், "காஷ்மீருக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டாலும், கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்பட மாட்டர். கூட்டத்தை கலைப்பது போன்ற பணிகளில் மட்டுமே ஈடுபடுவர்' என, தெரிவித்துள்ளது.


இதிலும் அரசியல்:காஷ்மீரில் நிலைமை மோசமாக உள்ள சூழ்நிலையிலும், அரசியல் கட்சிகள் இதிலும் அரசியல் நடத்த துவங்கி விட்டன. குறிப்பாக, ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சிக்கும், எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையே, இந்த விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.


முதல்வர் ஒமர் அப்துல்லா கூறுகையில்,"இந்த கலவரத்தின் பின்னணியில் சில அரசியல் கட்சிகளுக்கு தொடர்பு உள்ளது. எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாய கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரின் மகன்கள் நேரடியாக இதில் சம்பந்தப் பட்டுள்ளனர்' என்றார்.


மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி கூறுகையில்,"முக்கிய அரசியல் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல், தற்போதை பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகள், முக்கியமான அமைப்புகளுக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்ய வேண்டும். கடந்த 20 நாட்களாக மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஒமர் அப்துல்லா சில மணி நேரங்களை வீதியில் கழித்து பார்க்கட்டும். அப்போது தான் தற்போதைய பிரச்னையில் தீவிரம் அவருக்கு தெரியும்'என்றார்.


மத்திய அரசு முடிவு என்ன?தற்போது ராணுவத்தை அனுப்பி, பிரச்னையை ஓரளவுக்கு மத்திய அரசு சரி செய்தாலும், அடுத்த சில நாட்களில் மீண்டும் இதுபோன்ற கலவரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல், காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகளுடன் ஒத்துழைப்புடன் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உறுதியான நடவடிக்கையாக இருப்பதோடு, இறுதியான நடவடிக்கையாகவும் இருக்க வேண்டும். காலம், காலமாக தொடர்ந்து வரும் பிரச்னையை ஒரே நாள் இரவில் தீர்த்து விட முடியாது. பிரிவினைவாத அமைப்பில் உள்ள மிதவாதிகளையும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வைக்கலாம்.


குறிப்பாக, அப்பாவி இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் அவசியம். அதேபோல், காஷ்மீரில் கலவரம் ஏற்படுவதற்கு பாகிஸ்தானும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் மறுக்க முடியாது. பாகிஸ்தான் அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது, இந்த விஷயத்தை கண்டிப்புடன் மத்திய அரசின் பிரதிநிதிகள் தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்னையில் மூன்றாவது நாடு தலையிடுவதற்கான அவசியத்தையும் ஏற்படுத்தி விடக் கூடாது. மொத்தத்தில் கத்தி மேல் நடப்பது போன்ற விஷயம் தான் இது. மத்திய அரசு சாதுர்யமாக செயல்பட வேண்டிய நேரம் இது.


தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் : மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் காஷ்மீரில் தொடர்ந்து செயல்படுகின்றன. அவற்றில் சில அமைப்புகளின் பெயர்கள்:
1. அல் முஜாகிதீன் போர்ஸ்
2. அல் உமர் முஜாகிதீன்
3. ஹர்கத்-உல்-அன்சார்
4. ஹர்கத்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி
5. ஹிஸ்புல் முஜாகிதீன்
6. இக்வான் -உல்-முசல்மின்
7. ஜெய்ஸ்-இ-முகமது
8. லஷ்கர்-இ-தொய்பா
9. லஷ்கர்-இ-முகமதி
10. ஜமாத்-உல்-முஜாகிதீன்


காஷ்மீர் கலவரம் ஒரு புள்ளி விவரம் :காஷ்மீரில் கடந்த 1988ல் இருந்து நடந்து வரும் கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் குறித்த ஒரு புள்ளி விவரத்தை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
*பயங்கரவாத சம்பவங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை, 65 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை.
*வன்முறை மற்றும் கலவரம் காரணமாக இதுவரை 3,429 இளைஞர்கள் மாயமாகியுள்ளனர்.
*பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும் 49 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*பாகிஸ்தானில் 37 பயங்கரவாத முகாம்கள் செயல்படுகின்றன.
*இந்திய சிறைகளில் 125 காஷ்மீர் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
*பயங்கரவாத சம்பவங்களால் 75 ஆயிரம் காஷ்மீர் பண்டிட்கள், அங்கிருந்து நாட்டின் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
*பயங்கரவாதிகளிடம் இருந்து 60 டன் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன (2009 வரை).


சுற்றுலாவை சீர்குலைக்க சதி?காஷ்மீர், சுற்றுலாவுக்கு பிரபலமான இடம். கோடை காலத்தில் இங்குள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தால் சில ஆண்டுகள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தது. நிலைமை சற்று சீரடைந்ததை தொடர்ந்து, கடந்த ஐந்தாண்டுகளாக இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரத் துவங்கினர். இதை சீர்குலைக்கும் வகையில் தான், தற்போது திட்டமிட்டு இங்கு கலவரம் நடப்பதாக சுற்றுலா ஆர்வலர்கள் கூறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் தொடர்ந்து இங்கு கலவரம் நடப்பதை இதற்கு உதாரணமாக அவர்கள் கூறுகின்றனர்.கடந்த 2008 கோடை காலத்தில், அமர்நாத் குகை கோவில் வாரியத்துக்கு, நூறு ஏக்கர் நிலம் ஒதுக்குவது தொடர்பான பிரச்னையில் கலவரம் வெடித்தது. இதனால், சுற்றுலாத் துறை அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்தாண்டு, இரண்டு இளம் பெண்கள் பாதுகாப்பு படையினரால் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறி, பெரிய அளவில் கலவரம் வெடித்தது. இதனால் கடந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு வீழ்ச்சி அடைந்தது. இதுபோலவே, இந்தாண்டும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நேரத்தில் கலவரம் வெடித்துள்ளது.


இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்கான சதியா? கடந்த இரண்டு ஆண்டாக சர்வதேச அளவில் கடும் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. மிகப் பெரிய வல்லரசு நாடுகள் கூட, இந்த பொருளாதார மந்த நிலைக்கு தப்பவில்லை. பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியா, இந்த பொருளாதார மந்த நிலையிலும் வெற்றிகரமாக தாக்கு பிடித்தது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தாலும், பெரிய அளவிலான நிதி பிரச்னை ஏற்படவில்லை. ஆசிய பிராந்தியத்தில் இரண்டாவது பெரிய வல்லரசு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. சர்வதேச அளவிலும் இந்தியா வல்லரசாக உருவாகி விடுமோ என்ற அச்சம், மற்ற வல்லரசு நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை, பாகிஸ்தான் மூலமாக அந்த நாடுகள் ஏற்படுத்தி வருகின்றனவோ என்ற சந்தேகத்தை பொருளாதார நிபுணர்கள் எழுப்பியுள்ளனர். காஷ்மீரில் தற்போது ஏற்பட்டு வரும் கலவரம் இதன் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதும் அந்த நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

No comments:

Post a Comment