Saturday, July 10, 2010

சமூக இடைவெளி இல்லாத இந்தியா உருவாக அப்துல்கலாம் விருப்பம்

நாகர்கோவில் : 2020 ம் ஆண்டு, கிராமம் மற்றும் நகரங்களுக்கிடையிலான சமுக பொருளாதார இடைவெளி இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.


நாகர்கோவில் கோட்டார் டிவிடி மேல்நிலைப்பள்ளி பவள விழா கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் நடைபெற்றது. விழாவில் அப் துல் கலாம் பேசியதாவது: டிவிடி பள்ளி மாணவர் சிவதாணுபிள்ளையுடன் 40 ஆண்டு இணைந்துபணியாற்றியுள்ளேன். சிவதாணுபிள்ளை முயற்சியால் இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சியில், 200 மில்லியன் டாலர் செலவில் உருவான பிரம்மோஸ் ஏவுகணை, இன்று நாட்டுக்கு பத்து பில்லியின் டாலர் தந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சாணியாகவும் இருக்கிறது. இளைஞர்களும், மாணவர்களும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், எந்த லட்சியத்தையும் எட்ட முடியும். 2020 ம் ஆண்டில், இந்தியாவில் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையே சமூக பொருளாதார இடைவெளி இருக்க கூடாது. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடாக இந்தியா மாற வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைப்பது இளைஞர்களிடம் கடமையாகும், என்றார். விழாவில், விஞ்ஞானி டாக்டர் சிவதாணுபிள்ளை, சத்யபாமா பல்கலை வேந்தர் ஜேப்பியார், நூருல் இஸ்லாம் பல்கலை வேந்தர் மஜீத்கான், வி.ஜி. சந்தோஷம், எஸ். பத்மனாபன், குமரி அனந்தன் ஆகியோருக்கு அப்துல் கலாம் உலக சாதனையாளர் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.


லஞ்சத்தை ஒழிக்க முடியுமா: படந்தாலு மூட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு கலாம் பதிலளித்து கூறியதாவது:


* 2020 ல் இந்தியா வல்லரசாகும் திட்டத்தில் நாம் இதுவரை எத்தனை சதவீதம் வெற்றி பெற்றுள்ளோம்?
2020 ல் இந்தியா வல்லரசாக பொருளாதார வளர்ச்சி பத்து சதவீதமாக இருக்க வேண்டும். தற்போது அது 8.5 சதவீதமாக உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும். விவசாயம், தகவல் தொழில் நுட்பம், விஞ்ஞானம், கல்வி என பல துறைகளிலும் ஒருங்கிணைந்து வளர வேண்டும்.


* லெமுரியா கண்டத்தை போல குமரி கண்டமும் அழியுமா?
அதற்கு வாய்ப்பே இல்லை. சூரியன் தன்னுøடைய ஒளியை இழக்கும் வரை, பூமி இயங்கி கொண்டிருக்கும். பத்து பில்லியன் ஆண்டு வரை பூமிக்கு எந்த பிரச்னையும் இல்லை.


* இந்தியாவில் கோர்ட்டு தீர்ப்புகள் தாமதமாவதை மாற்ற முடியுமா?
அதற்கு பல காரணங்கள்உள்ளது. தற்போது எல்லா கோர்ட்டுகளும் கம்ப்யூட்டர் மயமாக்கப்படுகிறது. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் தீர்ப்பு விரைந்து கிடைக்கும்,என நம்புகிறேன்.


* இந்தியாவின் வளர்ச்சிக்கு தடைக்கல் எது?
"என்னால் முடியும்' என்ற எண்ணம் இளைஞர்களிடம் வந்தால் இந்தியா ஒளிரும்


* லஞ்சத்தை ஒழிக்க முடியுமா?
லஞ்சம் என்பது குடும்பத்தில் இருந்து துவங்குகிறது. நாட்டில் 20 கோடி குடும்பங்கள் உள்ளது. குழந்தைகள் பெற்றோர்களிடம் லஞ்சம் வாங்க கூடாது, என சொல்ல வேண்டும். லஞ்சப்பணத்தில் ஏதாவது வாங்கி கொடுத்தால், அதை குழந்தைகள் வாங்கக் கூடாது. அவ்வாறு செய்தால் பெற்றோருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டு லஞ்சம் வாங்குவதை தவிர்ப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment